தமிழர் ஒருவர் லண்டன் நகருக்குச் சென்றார்.
காலையில் குளித்துவிட்டு கட்டுக்கட்டாக விபூதி பூசினார்.
அதைப் பார்த்த ஒரு ஆங்கிலேயர் அவரிடம் கேட்டார்.
ஏன் இப்படி சாம்பலை அள்ளி நெற்றியில் பூசுகிறீர்கள்?
தமிழர் பதில் சொன்னார்.
இந்த உடம்பு என்றாவது ஒரு நாள் சாம்பலாக போகிறது என்பதை நாங்கள் தினமும் நினைவுப்படுத்திக் கொள்கிறோம்.
அதன் மூலம் கெட்ட புத்தி விலகி விடுகிறது.
ஆங்கிலேயர் திகைத்துப் போனார்.
லண்டனில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த தமிழர் எனக்குச் சொன்ன செய்தி இது.
யாக்கை நிலையாமையை தத்துவஞானிகள் அடிக்கடி கூறி வந்திருப்பது மனிதனை விரக்தி அடையச் செய்வதற்கு அல்ல.
வாழ்க்கையில் ஒரு தைரியத்தை உண்டாக்குவதற்கு.
' விட்டு விடப் போகுது உயிர் விட்டவுடனே உடலை சுட்டு விடப் போகின்றார் சுற்றத்தார்' என்று பட்டினத்தார் மரணத்தைச் சுட்டிக் காட்டியது ஒரு நாள் மரணம் வரப்போகிறது என்பதை உணர்ந்து அதுவரை வாழ்க்கையை நேர்மையாக நடத்துமாறு செய்வதற்கே.
இந்த ஞானம் ஒவ்வொரு சராசரி மனிதனுக்கு கூட ஒரு நாள் வருகிறது.
ஏதாவது ஒரு சாவு வீட்டுக்குப் போகும்போது நாமும் சாகத்தான் போகிறோம் என்ற எண்ணம் வருகிறது.
அதையே மயான வைராக்கியம் என்பார்கள்.
காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா என்று பாடியவர் இறைவன் படைத்த உடலை அவமானப்படுத்துவதற்காக பாடவில்லை.
பொய்யான இந்த காயத்தை காப்பாற்ற நீ பொய் சொல்லாதே!
நீ திருடாதே!
பிறரை ஏமாற்றாதே என்று எச்சரிப்பதற்காக பாடினார்.
இந்த உயிர் இறைவன் கொடுத்த கடன்.
இந்த உடல் இலவசமாக கொடுத்த பரிசு.
தலை வழுக்கை விழுவதோ, ரோமம் நரைப்பதோ,
பல் விழுவதோ இறைவன் நமக்கு போடும் ஞாபக கடிதம்.
கையெழுத்துப் போட்ட பத்திரம் காலாவதியாகிப் போகிறது கடனை கட்டுவதற்கு தயாராகிக் கொள் உன் உயிரை நான் ஜப்தி செய்யப் போகிறேன் என்று இறைவன் நம்மை எச்சரிக்கிறான்.
உயிரை ஜப்தி செய்வதற்காக எமன் எப்பொழுதும் வாசலில் நிற்கிறான் என்பதை நமது சித்தர்களும் ஞானிகளும் சுட்டிக்காட்டினார்கள்.
உடலின் நிலையாமையை மனிதன் உணர்ந்து கொண்டிருந்தால் கூடுமானவரை அவன் மனதில் நாணயம் , நேர்மை, இரக்கம், கருணை எல்லாம் வளர்ந்து விடுகின்றன.
சாவதற்குள் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது
துன்பங்களை அலட்சியப்படுத்தும் சக்தி வருகிறது அல்லது சாவதற்குள் நன்றாக உழைத்து குடும்பத்திற்கு ஒரு வழி செய்து விட வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.
யாக்கை நிலையாமையை மறந்தவர்கள் எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று அலைந்து சம்பாதித்த பணத்தை தாங்கள் அனுபவிக்காமலே மாண்டு போகிறார்கள்.
மரணத்தின் மகத்தான சக்தியை மரணம் வருவதற்கு முன்பே மனிதனை அறிந்து கொள்ள செய்வது சமயவாதிகளின் நோக்கங்களில் ஒன்றாகும்.
எதையும் அளவோடும் நியாயமாகவும் பகிர்ந்து அனுபவிக்கும் உணர்ச்சிக்கு இது அடித்தளம்.
காயம் நிலையாமையை பற்றி பாடிய பட்டினத்தார் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில்தான் பாடினார் என்றாலும் அந்த சிந்தனை வந்த பிறகுதான் அவருக்கு அமைதி வந்தது என்பதை அவரது வாழ்க்கையில் இருந்து காணுகிறோம்.
செத்தாரை போலே திரி என்று அவர் சொன்னது பத்தி இல்லாமல் வாழ சொன்னதாகும்.
அதே நேரத்தில் ஆவியும் காயமும் அழிவது என்றாலும் பாவி என்ற பெயரை படைக்கக்கூடாது என்று அவர் கூறுவது கவனிக்கத்தக்கது.
வாழ்க்கைக்கு மூன்று சங்குகள் என்கிறார் பட்டினத்தார்.
முதல் சங்கு பாலூட்டுகிறது குழந்தையாக இருக்கும் போது
இரண்டாவது சங்கு திருமணத்தின் போது ஊதப்படுகிறது.
மூன்றாவது சங்கு மரணத்திற்கு பிறகு ஊதப்படுகிறது.
அதிலும் வார்த்தைகளோடு அழகாக விளையாடுகிறார் பட்டினத்தார்.
சங்கம் என்ற வார்த்தை சங்கையும் குறிக்கும் சங்கமம் ஆவதையும் குறிக்கும்.
முதற்சங்கம் அமுதூட்டும் என்பது சங்கு பால் கொடுப்பதை குறிக்கிறது.
மொய்குழலார் ஆசை நடுச்சங்கம் என்பது ஆண் பெண் உறவு நடுவிலே சங்கமம் ஆவதை குறிக்கிறது.
கடைச்சங்கம் என்பது கடைசியில் மரணத்தில் சங்கமம் ஆவதை குறிக்கிறது.
இவ்வளவுதான் நாம் பூமியில் வாழ்ந்த வாழ்க்கை என்கிறார் பட்டினத்தார்.
இந்த உடல் நமக்கே சொந்தம் என்று நாம் இருக்கிறோமாம். நாயும் நரியும் , பேயும் கழுகும் தாம் ஒரு நாள் இதை உண்ணப் போகிறோம் என்று காத்துக் கொண்டிருக்கிறானவாம்.
நிலையாத இந்த உடம்பின் மீது எவ்வளவு மோகம் எவ்வளவு வர்ணனைகள்.
இந்த உடம்பும் அழகும் பொய் என்று நினைப்பதில் என்ன லாபம் என்று நீங்கள் கேட்கக் கூடும்.
அளவுக்கு மிஞ்சிய பற்று அடிபட்டுப் போவது முதல் லாபம்.
கடற் பாம்பின் கால்கள் போல் ஆசைகள் திசை தோறும் பரவாமல் , கிடைத்த வரைக்கும் நிம்மதி என்று வருவது இரண்டாவது லாபம்.
அதனால்தான் இறந்தவர் உடலை புதைப்பதில்லை.
எரித்து விடுகிறார்கள்.
இந்த உடம்புக்கான தவணை முடிந்து விட்டது அது சாம்பலாகி விடுவதுதான் நியாயம்.
அதை புதைத்து வைத்து இன்னும் அது இருப்பது போன்ற பிரம்மையை உண்டாக்க கூடாது என்று கருதினார்கள்.
புதைபட்ட உடலுக்கு அது புதைக்கப்பட்ட இடம் சொந்தமாகி விடுகிறது.
எரிக்கப்பட்ட உடலுக்கு எது சொந்தம்?
காதற்ற ஊசியும் வராது காண் கடை வழிக்கே என்றார்கள்.
பிறந்த உடலுக்கு ஏன் ஆறடி நிலத்தைச் சொந்தமாக்க வேண்டும்?
அது சாம்பலாகி கரைந்து போவதுதான் முறை என்று நம்பினார்கள்.
தங்களை தாங்களே சரி பார்த்துக் கொள்ள நமது தத்துவ ஞானிகள் வற்புறுத்திய நிலையே யாக்கை நிலையாமை.
எமன் வாசலில் நிற்கிறான்!
இறைவனிடம் வாங்கிய கடனை திருப்பிக் கட்ட தயாராக இருங்கள்!
0 Comments