கடந்த சில நாட்களா செய்திகள்ல ஒரு விஷயத்தை கவனிச்சிருப்பீங்க. ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில (Ethiopia) ஒரு எரிமலை வெடிச்சு, அதுல இருந்து கிளம்பின ராட்சத தூசு மற்றும் புகைக் கூட்டம் (Volcanic Ash Plume/Sulphur Dioxide cloud), அரபிக் கடலைக் கடந்து இப்ப வட இந்தியாவை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்குன்னு.
இதனால குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மாதிரியான மாநிலங்கள்ல சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படலாம், முக்கியமா காற்று மாசுபாடு அதிகரிக்கலாம், அமில மழை பெய்யக்கூடும்னு வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கிறாங்க. ஒரு எரிமலை எங்கேயோ ஆப்பிரிக்காவில வெடிச்சா, அதோட தாக்கம் இங்க இந்தியா வரைக்கும் இருக்குமான்னு பலரும் ஆச்சரியமா கேக்குறாங்க.
ஆனா, இயற்கை எவ்வளவு பிரம்மாண்டமானது, அதுல நாம எவ்வளவு சிறியவங்கங்குறதுக்கு வரலாறு பல தடவை பாடம் எடுத்திருக்கு. இன்னைக்கு எத்தியோப்பியா எரிமலைப் புகை ஒரு சிறிய அச்சுறுத்தலா தெரியலாம். ஆனா, சரியா 209 வருஷங்களுக்கு முன்னாடி, இதே மாதிரி ஒரு எரிமலை வெடிப்பு இந்த உலகத்தையே இரண்டு வருஷங்களுக்கு இருட்டுல தள்ளுச்சுன்னு சொன்னா நம்புவீங்களா?
அது வெறும் இருட்டு மட்டும் இல்ல; அது பசி, பஞ்சம், நோய், ஏன்... உலக வரைபடத்தையே மாற்றியமைச்ச ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வு. அதைப்பத்திதான் இன்னைக்கு நாம விரிவா பார்க்கப் போறோம்.
அந்தக் கருப்பு ஆண்டு: 1815 - தம்போரா (Tambora) விழித்துக் கொண்ட போது…
இந்தோனேசியா தீவுக்கூட்டத்துல, சும்பாவா (Sumbawa) அப்படின்னு ஒரு தீவு இருக்கு. அங்க இருந்த ஒரு பிரம்மாண்டமான எரிமலைதான் 'தம்போரா'. பல நூற்றாண்டுகளா தூங்கிக்கிட்டு இருந்த அந்த அரக்கன், ஏப்ரல் 1815-ல முழிச்சுக்கிட்டான்.
அதுவரைக்கும் மனித குல வரலாறு பதிவு செய்ததிலேயே மிகப்பெரிய எரிமலை வெடிப்பு அதுதான் (Volcanic Explosivity Index - VEI 7). ஏப்ரல் 5-ம் தேதி சின்னதா ஆரம்பிச்ச வெடிப்பு, ஏப்ரல் 10-ம் தேதி உச்சக்கட்டத்தை அடைஞ்சுது.
அந்த வெடிப்பின் சத்தம் எவ்வளவு பயங்கரமா இருந்துச்சுன்னா, சுமார் 2,600 கிலோமீட்டர் தள்ளி இருந்த இடங்கள்ல கூட ஏதோ பீரங்கி வெடிக்கிற மாதிரி சத்தம் கேட்டுச்சாம். சும்பாவா தீவுல இருந்த சுமார் 10,000 பேர் அந்த நொடியே சாம்பலுக்குள்ள புதைஞ்சு போயி இறந்தாங்க. எரிமலையோட உயரம் கிட்டத்தட்ட 14,000 அடியில இருந்து 9,000 அடியா குறைஞ்சு போச்சு. அதாவது, மலையின் ஒரு பெரிய பகுதியே வெடிச்சுச் சிதறிடுச்சு.
சரி, ஒரு தீவு அழிஞ்சது சோகம்தான். ஆனா உலகத்துக்கு என்ன ஆச்சு?
இங்கதான் பிரச்சனையே ஆரம்பிச்சது. தம்போரா எரிமலை கக்கினது வெறும் நெருப்புப் பிழம்பு மட்டும் இல்ல. அது பல லட்சம் டன் சாம்பலையும், சல்பர் டை ஆக்சைடு வாயுவையும் பூமியின் வளிமண்டலத்தோட மேல் அடுக்கான 'ஸ்ட்டோஸ்பியர்' வரைக்கும் வீசியெறிஞ்சது. கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர் உயரத்துக்கு அந்தப் புகை மண்டலம் பரவுச்சு.
பொதுவா எரிமலை வெடிச்சா நெருப்புப் பிழம்பு வெளிப்பட்டு, பூமி சூடாகும்னு நினைப்போம். ஆனா, தம்போரா செஞ்சது நேர்மாறான வேலை. வளிமண்டலத்துல கலந்த அந்த சல்பர் வாயு, சின்னச் சின்னத் துகள்களா (Aerosols) மாறி, பூமி முழுசா ஒரு போர்வை மாதிரி போர்த்திக்கிச்சு.
இந்தப் போர்வை என்ன பண்ணுச்சுன்னா, சூரியன்ல இருந்து பூமிக்கு வர்ற வெப்பக்கதிர்களை உள்ளே விடாம, ஒரு கண்ணாடி மாதிரி திருப்பி விண்வெளிக்கே அனுப்பிடுச்சு. இதனால என்ன ஆகும்? பூமி குளிரத் தொடங்குச்சு. உலகத்தோட சராசரி வெப்பநிலை சுமார் 0.4 முதல் 0.7 டிகிரி செல்சியஸ் வரை குறைஞ்சுது. இது கேக்க சின்ன நம்பரா தெரியலாம், ஆனா இது உலக காலநிலையில ஏற்படுத்தின தாக்கம் கற்பனைக்கும் எட்டாதது.
இதன் விளைவா பிறந்ததுதான் வரலாற்றில் மிகவும் மோசமான ஒரு வருடம் - "கோடைக்காலம் வராத ஆண்டு" (The Year Without a Summer - 1816).
1816: சூரியன் தொலைந்த வருடம்!
1815-ல எரிமலை வெடிச்சாலும், அந்தப் புகை மண்டலம் உலகம் பூரா பரவி தன்னோட வேலையைக் காட்ட ஒரு வருஷம் ஆச்சு. 1816-ம் வருஷம் விடிஞ்சப்போ, உலகம் ஒரு விசித்திரமான, பயங்கரமான சூழலைச் சந்திச்சது.
வழக்கமா ஜூன், ஜூலை மாசங்கள்ல அமெரிக்காவுலயும், ஐரோப்பாவிலயும் கோடைக்காலம் கொளுத்தும். ஆனா 1816-ல என்ன நடந்துச்சு தெரியுமா? ஜூன் மாசத்துல அமெரிக்காவின் நியூயார்க் போன்ற பகுதிகள்ல கடும் பனிப்பொழிவு பெய்ஞ்சது! ஆறுகளும் ஏரிகளும் கோடைக்காலத்துல உறைஞ்சு போச்சு.
பறவைகள் பறந்துக்கிட்டு இருக்கும்போதே குளிர்தாங்க முடியாம செத்து கீழே விழுந்துச்சு. ஆடு மாடுகள் மேய்ச்சலுக்குப் புல் இல்லாமலும், குளிரிலும் மடிஞ்சுது. சூரியன் கண்ணுக்கே தெரியல. எப்பவும் வானம் ஒரு மங்கலான, செம்பழுப்பு நிறத்துல, ஒரு விதமான ’உலர் பனிமூட்டத்தோட’ காட்சியளிச்சது.
காலநிலை மாறுனா முதல்ல பாதிக்கப்படுறது விவசாயம்தான். பயிர்கள் எல்லாம் வளர்ற பருவத்துல உறைபனியால கருகிப்போச்சு. அமெரிக்காவுல சோளம், கோதுமை விளைச்சல் முழுசா நாசமாச்சு. ஐரோப்பாவுல உருளைக்கிழங்கு விளைச்சல் அடியோடு போச்சு.
இதோட விளைவு - வரலாறு காணாத பஞ்சம். உணவுப் பொருட்களோட விலை பத்து மடங்கு, இருபது மடங்கு ஏறிடுச்சு. மக்கள் சாப்பிட வழியில்லாம எலிகளையும், பூனைகளையும், ஏன்... புற்களையும் வேர்களையும் தின்னு உயிர் வாழ்ந்தாங்க. அயர்லாந்துல பஞ்சம் தலைவிரித்தாடுச்சு. பிரான்ஸ், இங்கிலாந்துல பசியால வாடுன மக்கள் கலவரங்கள்ல ஈடுபட்டாங்க. உணவுக்கிடங்குகள் சூறையாடப்பட்டது.
பாதிப்பு மேற்குலகத்தோட நிக்கல. சீனாவில பல மாகாணங்கள்ல பயிர்கள் அழிஞ்சு, மக்கள் களிமண்ணைச் சாப்பிட்டதா குறிப்புகள் இருக்கு.
சரி, நம்ம இந்தியாவுக்கு என்ன ஆச்சு? தம்போராவின் தாக்கம் இந்தியாவையும் விட்டுவைக்கல. இந்தத் தட்பவெப்ப நிலை மாற்றம், இந்தியாவின் உயிர்நாடியான பருவமழையையே குழப்பிடுச்சு. 1816-17 காலகட்டத்துல பருவமழை சரியா பெய்யல, சில இடங்கள்ல வெள்ளம், பல இடங்கள்ல வறட்சி.
இந்தக் காலநிலை குழப்பம் ஒரு புதிய எமனை இந்தியாவுல உருவாக்குச்சு. அதுதான் - காலரா. வங்காளப் பகுதியில, பருவமழை பொய்ச்சதால தேங்கி நின்ன அசுத்தமான நீர்நிலைகள்ல இருந்து, காலரா நோய்க்கிருமி ஒரு வீரியமான வடிவத்துல உருவெடுத்துச்சு. அது அங்கிருந்து இந்தியா முழுக்கப் பரவி, அப்புறம் உலகம் முழுக்கவும் பரவி லட்சக்கணக்கான மக்களைப் பலிவாங்குச்சு. தம்போரா எரிமலை வெடிப்புக்கும், இந்த உலகளாவிய காலரா பரவலுக்கும் நேரடித் தொடர்பு இருக்குன்னு ஆய்வாளர்கள் சொல்றாங்க.
இலக்கியம் மற்றும் கலையில் தம்போராவின் சுவடுகள்:
இது ஒரு விசித்திரமான தகவல். அந்த வருஷம் கோடைக்காலமே இல்லாததால, மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டியதா போச்சு. அப்படி சுவிட்சர்லாந்துல ஒரு ஏரிக்கரையில, வீட்டுக்குள்ள மாட்டிக்கிட்ட சில எழுத்தாளர்கள், பொழுதைப் போக்க "யார் மிகச்சிறந்த திகில் கதையை எழுதுறது?"ன்னு ஒரு போட்டி வச்சாங்க.
அந்தப் போட்டியின் விளைவா உருவானதுதான், மேரி ஷெல்லி (Mary Shelley) எழுதின உலகப்புகழ் பெற்ற ’ஃபிராங்கண்ஸ்டைன்’ (Frankenstein) நாவல்! அதேபோல, நவீன வாம்பயர் (Vampire) கதைகளுக்கும் அந்த இருண்ட நாட்கள்தான் விதை போட்டுச்சு.
அதுமட்டுமில்லாம, அந்த காலகட்டத்துல வரையப்பட்ட பல ஓவியங்கள்ல, வானம் ஒரு விதமான மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத்துல பயங்கரமா இருக்கும். அது ஓவியரோட கற்பனை இல்ல, எரிமலைப் புகையால வானம் உண்மையாவே அப்படித் தெரிஞ்சதுதான் காரணம்!
தம்போரா எரிமலை வெடிப்பால உலகம் முழுக்க மறைமுகமா இறந்தவங்களோட எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும். ஒரு மலை, இந்தோனேசியாவின் ஒரு மூலையில வெடிச்சது, அது உலகத்தோட அரசியலை, பொருளாதாரத்தை, மக்களின் உடல்நிலையை, ஏன்... இலக்கியத்தை கூட பல வருஷங்களுக்குப் பாதிச்சது.
இப்போ எத்தியோப்பியா எரிமலையைப் பார்த்து நாம கொஞ்சம் கவலைப்படுறோம். ஆனா, தம்போரா மாதிரி ஒரு நிகழ்வு நவீன காலத்துல நடந்தா என்ன ஆகும்னு கற்பனை செஞ்சு பாருங்க? நம்மகிட்ட இருக்கிற தொழில்நுட்பம், விமானங்கள், செயற்கைக்கோள்கள் எல்லாமே இயற்கையின் ஒரு சிறிய சீற்றத்துக்கு முன்னாடி செயலிழந்து போகும்.
"நாங்கள் இயற்கையை வென்றுவிட்டோம், தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கிறோம்" என்று மனித இனம் மார்தட்டிக்கிட்டாலும், பூமி லேசா ஒரு சிலிர்ப்பு சிலிர்த்தா கூட, நாம தாங்க மாட்டோம்ங்குறதுக்கு தம்போரா ஒரு சாட்சி.
இன்னைக்கு வட இந்தியாவை நோக்கி வரும் புகையைப் பார்த்து நாம சூழலியல் பத்தி பேசுறோம். ஆனா, 200 வருஷத்துக்கு முன்னாடியே இயற்கை நமக்கு ஒரு பெரிய பாடம் எடுத்திருக்கு. காலநிலை மாற்றம் என்பது எவ்வளவு பெரிய பேரழிவை ஏற்படுத்தும்ங்குறதை இந்த வரலாறு நமக்கு உணர்த்துது. இயற்கையைப் புரிஞ்சுப்போம், அதை மதிச்சு நடப்போம்.
பதிவை எழுதியவருக்கு நன்றி..
0 Comments