Header Ads Widget

TET | தமிழ்நாட்டில் 4 லட்சம் ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு எழுத விலக்கு அளித்து உத்தரவிடக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

TET | தமிழ்நாட்டில் 4 லட்சம் ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு எழுத விலக்கு அளித்து உத்தரவிடக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
TET Exam | டெட் தேர்வு கட்டாயத்தால், தமிழ்நாட்டில் 4 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியராக பணியாற்றவும், பதவி உயர்வு பெறவும் தகுதித் தேர்வில் (TET Exam) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதுதொடர்பாக வழக்கொன்றில் சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், 2011 தகுதித் தேர்வுக்கு முன்பாக பதிவு மூப்பின் அடிப்படையில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் 2 ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் பதவி உயர்வுக்கும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என தெரிவித்தது. அவ்வாறு தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியிலிருந்து விலகிக் கொள்ள நேரிடும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டது.
இந்த தீர்ப்பின் காரணமாக, மாநிலம் முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் ஆசிரியர்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகியது. இந்நிலையில் ஜனவரி 24 மற்றும் 25 ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை தேர்வு வாரியம் வெளியிட்டது.
ஆனால் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் சிறப்பு டெட் தேர்வு அறிவிக்கையை இணையதளத்தில் இருந்து ஆசிரியர் தேர்வு வாரியம் நீக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆசிரியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அடுத்தாண்டு ஜனவரி, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஆசிரியர் பணியில் உள்ளவர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இதற்கிடையே, டெட் தேர்வினால் நீண்ட காலம் பணியில் இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதால், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்ய வலியுறுத்தி பிரதமர் நரேந்திரமோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் பிரிவு 23, தேசிய ஆசிரியர் கல்விக் குழும சட்டம் பிரிவு 12-A ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆசிரியர்களை பாதுகாப்பதுடன், குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆசிரியர்கள் 2 ஆண்டுக்குள் TET தேர்ச்சி பெறவில்லை எனில், அவர்களின் வேலை பறிக்கப்படும் என்ற நிலை பெருத்த நிர்வாக சிரமத்தையும், ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட சிரமத்தையும் ஏற்படுத்தும் என்று வருத்தத்தோடு தெரிவித்து கொள்வதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இது, முறையாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் பெரும்பான்மையோரை நேரடியாக பாதிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் மட்டும் ஏறத்தாழ 4 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதாக கூறியுள்ள முதலமைச்சர், TET-யை முந்தைய தேதியிட்டு அமல்படுத்துவது என்பது ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் இடையூறை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
RTE சட்டத்தின் பிரிவு 23-ல் தெரிவிக்கப்பட்ட குறிப்புரைகளால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு அதற்கான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு தமது கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

Post a Comment

0 Comments